இன்றைய நிலையில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி விலை கொடுத்து வாட்ஸ் ஆப் நிறுவனத்தை வாங்கியுள்ளது பேஸ்புக்.
காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது.
இன்றைய இளைஞர்களுக்கு வாய்த்த வரப்பிரசாதமாக வாட்ஸ் ஆப் கருதப்படுகிறது.
இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை எவ்வித செலவுமின்றி, உலகின் எந்த மூலையில் உள்ள நபருக்கும் அரை நொடிக்குள் அனுப்பி விடலாம்.
நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போவதால், இதனை பேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளது.
38 வயதிலேயே உலகம் திரும்பி பார்க்ககூடிய கோடீஸ்வரர்களில் ஒருவராகி விட்டார் வாட்ஸ் ஆப்பின் நிறுவனர் ஜசன் கோம், இணை நிறுவனர் பிரையன் ஆக்டன். இவர்கள் இருவரின் கதை மிகவும் சுவாரசியமானது.
வறுமையில் வாடிய ஜசன் கோம்
உக்ரைனின் தலைநகர் கீவ்வை சேர்ந்தவர் கோம், யூத இனத்தவர்.
சிறு வயதிலேயே தனது தாயாருடன் கலிபோர்னியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தார், அப்போது இவருக்கு வயது 16தான்.
சோவியத் யூனியன் உடைந்த பின்னர் இந்த இடமாற்றம் நடந்தது.
ஆனால் கோமும், அவரது தாயாரும் மட்டுமே அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர், கோமின் தந்தை வரவில்லை.
உக்ரைனிலிருந்து வரும்போது கோமின் தாயார், தனது மகன் பயன்படுத்திய சில பேனாக்கள், நோட்டுப் புத்தகங்களையும் கூடவே கொண்டு வந்திருந்தார்.
கலிபோர்னியாவில் தனது மகனைப் பள்ளிக்குச் சேர்த்தபோது புதிய பேனா, நோட்டுப் புத்தகங்களை வாங்க முடியாததால் இவற்றையேப் பயன்படுத்திக் கொண்டாராம் கோம்.
படிக்கும்போதே, பலசரக்குக் கடை ஒன்றில் தரையைத் துடைக்கும் வேலையில் ஈடுபட்டு சம்பாதித்தார்.
பழைய புத்தகக் கடை ஒன்றை அணுகி அங்கிருந்த கணனி தொடர்பான புத்தகங்களை வாங்கிப் படிப்பாராம்.
படித்து விட்டு திருப்பிக் கொடுத்து விடுவாராம், இப்படித்தான் நெட்வொர்க்கிங் குறித்து படித்துத் தேறியுள்ளார்.
1997ம் ஆண்டு சிலிக்கான் வேலியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிப்புக்காக சேர்ந்தார்.
மேலும் படிப்புச் செலவுக்காக ஒரு கணனி நிறுவனத்தில் பகுதி நேர வேலையிலும் சேர்ந்தார்.
அந்த சமயத்தில்தான் யாஹு நிறுவனத்திற்காக ஒரு வேலைக்குப் போயிருந்தபோது பிரையன் ஆக்டனுடன் நட்பு ஏற்பட்டது.
இருவரும் ஒரே வருடத்தில் மிகச் சிறந்த , நெருக்கமான நண்பர்களாகி விட்டனர். யாஹு நிறுவனத்திலேயே என்ஜீனியராக வேலையில் சேர்ந்தார் கோம்.
யாஹு நிறுவன வேலை பிடித்துப் போனதால் படிப்பை விட்டு விட்டார்.
இந்நிலையில் 2000மாவது ஆண்டு கோமின் தாயார் புற்றுநோயால் மரணமடைந்தார். அப்போது கோமுக்கு மிகுந்த உறுதுணையாக இருந்தவர் ஆக்டன்.
இந்நிலையில் 2007ம் ஆண்டு இருவரும் யாஹு நிறுவனத்திலிருந்து விலகினர்.
ஒரு வருடம் ஜாலியாக ஊர் சுற்றிப் பார்த்தனர், அதன் பின்னர்தான் இருவரும் இணைந்து வாட்ஸ் ஆப் புரட்சிக்கு வித்திட்டனர்.
இன்று உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு உயர்ந்துள்ளனர்.
தனது வாட்ஸ் ஆப் நிறுவனத்தை பிரையனுடன் இணைந்து பேஸ்புக்குக்கு விற்றுள்ள கோம், பேஸ்புக் இயக்குநர்கள் குழுவில் ஒருவராக இணைகிறார்.
பேஸ்புக்குடன் தனது நிறுவனத்தை விற்பது தொடர்பான ஒப்பந்தத்தில் தானும் தனது தாயும் சிறு வயதில் வறுமையுடன் வாழ்ந்து வந்த இடத்தில் வைத்துக் கையெழுத்துப் போட்டுள்ளார்.
அந்த இடத்தில்தான் தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனமும் இயங்கி வருகிறது.
பேஸ்புக்கால் நிராகரிக்கப்பட்ட பிரையன் ஆக்டன்
இதில் மற்றொரு சுவாரசியம் ஒரு காலத்தில் பேஸ்புக் நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டவர் தான் வாட்ஸ் ஆப்பின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன்.
அன்று யாரை நிராகரித்ததோ இன்று அவரிடமிருந்தே, அவரது நிறுவனத்தை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பேஸ்புக்.
இதே பிரையன் நான்கு வருடங்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவன வாசலில் வேலை கேட்டு போய் நின்றார்.
ஆனால் அவருக்குக் கிடைத்த பதில், நீ வேண்டாம் போ என்பதே.
ஆனால் இன்றே பிரையனிடம் இருந்து வாட்ஸ் ஆப் நிறுவனத்தை வாங்கியுள்ளது, முன்பே பிரையனுக்கு வேலை கொடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?
தன்னை பேஸ்புக் நிராகரித்து விட்டதாக டுவிட்டரில் போட்டுள்ளார் பிரையன்.
அதில், தன்னை பேஸ்புக் நிராகரித்து விட்டது, எனவே மக்களுடன் இணைந்திருக்க அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது, அடுத்த சாதனைக்காக காத்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், டுவிட்டரும் கூட பிரையனை நிராகரித்தது தான்.
“முயற்சி இருந்தால் முடியாதது ஒன்றுமில்லை”
|
No comments:
Post a Comment